For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

1 ட்ரில்லியன் பொருளாதாரம்.. வெள்ளை அறிக்கை வேண்டும்.! இபிஎஸ் சரமாரி குற்றசாட்டு.! 

02:47 PM Feb 15, 2024 IST | மணிகண்டன்
1 ட்ரில்லியன் பொருளாதாரம்   வெள்ளை அறிக்கை வேண்டும்   இபிஎஸ் சரமாரி குற்றசாட்டு   
Edappadi Palanisamy - Tamilnadu CM MK Stalin [File image]
Advertisement

இன்று தமிழக சட்டப்பேரவையில், பட்ஜெட் கூட்டத்தொடர் முதல் நாளில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆற்றிய உரைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரை அளிக்கும் நிகழ்வு நடைப்பெற்றது. இந்த நிகழ்வு நிறைவு பெற்ற பின்னர் தலைமை செயலக வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அவர் கூறுகையில், அதிமுக ஆட்சி காலத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பல்வேறு உத்தரவுகள் தற்போது ஏற்கப்படாமல் இருக்கின்றன. குறிப்பாக 11.12.2017இல் அதிமுக ஆட்சியில் 12 ஆரம்ப சுகாதர நிலையம் அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அடுத்து 20.03.2018இல் 30 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கெல்லாம் ஆளும் அரசு மறுப்பதை சட்ட பேரவையில் தெரிவித்தேன். அப்போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் குறுக்கிட்டார்.

33 மாதங்கள்.. திராவிட அரசின் திட்டங்கள்… நீண்ட பட்டியலை கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

வெள்ளை அறிக்கை :

திமுக அரசு பொறுப்பேற்ற 33 மாதங்களில் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. அதனை செயல்படுத்தும் போதெல்லாம் பிரச்சனை வருகிறது. உடனே ஒரு குழு அமைத்து விடுகிறார்கள். அப்படியாக இதுவரை 52 குழுக்கள்  அமைக்கப்பட்டுள்ளன. அதில் எத்தனை குழு அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது, அதன் பெயரில் அரசு என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளன என வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கூறினேன்.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு : 

உலக முதலீட்டார்கள் மாநாடு நடத்தினார்கள். அதன் மூலம் இதுவரை எத்தனை நிறுவனங்கள், எத்தனை கோடி ரூபாய்க்கு முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டுள்ளன. அதன் மூலம் எத்தனை பேருக்கு வேலை கிடைக்கும் என விரிவான வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய கோரினேன்.

புயல் பாதிப்பு : 

மிகஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்கள் கடுமையான வெள்ள பாதிப்புகளால் பாதிக்கப்பட்டன. அதனால், பலர் தங்கள் உடமைகளை இழக்கும் சூழல் உருவானது. அந்த சமயத்தில் மேற்கொள்ளப்பட்ட வெள்ள நிவாரண பணிகள் என்னென்ன.? அதற்கான நிதி ஒதுக்கீடு எவ்வளவு .? தென் தமிழகத்தில் பெய்த கனமழையினால் ஏற்பட்ட சேதம் என்ன.? அதனை சரி செய்ய ஒதுக்கிய நிதி விவரம் குறித்தும் கேட்டேன் அதற்கும் பதில் இல்லை.

தமிழகம் 1 டிரில்லியன் பொருளாதார வளர்ச்சி அடைய வேண்டும் என கூறுகிறார்கள். அதற்கு என்ன யுக்தி இவர்கள் கையாள போகிறார்கள் என்ற விவரத்தை கேட்டேன் அதற்கும் பதில் இல்லை.

தரிசு நிலம் - விளைநிலம் :

ஆட்சிக்கு வந்த உடன் 11.7 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் விளைநிலங்களாக மாற்றப்படும் என கூறினார்கள். இதுவரை எத்தனை லட்சம் ஏக்கர் நிலம் விளைநிலங்களாக மாற்றப்பட்டது .? என கேட்டேன் பதில் இல்லை. இரு போக சாகுபடி நிலம் தற்போது 10 லட்சம் ஏக்கர்பரப்பளவாக உள்ளது. அது  20 லட்சம் ஏக்கராக மாற்றப்படும் என கூறினார்கள் அதன் நிலை பற்றி கேள்வி கேட்டேன். பதில் இல்லை.

2023 ஜூன் மதம் மேட்டூர் அணையில் நீர் திறந்து விடும் போது முதல்வர் இனி தவறாமல் சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என கூறினார். ஆனால் தற்போது உரிய அளவு தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் குறுவை சாகுபடி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டனர்.

பயிர் காப்பீடு :

ஆனால் தற்போது திமுக ஆட்சியில் குறுவை சாகுபடி பயிர்கள் பயிர்காப்பீட்டு திட்டத்தின் கீழ் சேர்க்கப்படாத காரணத்தால்  தற்போது கருகும் நிலையில் உள்ள பயிர்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.  குறுவை சாகுபடியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு 84 ஆயிரம் ரூபாய் வழங்க கோரிக்கை வைத்துள்ளேன். சம்பா, காலடி பயிர்களுக்கு காலம் தாழ்த்தி தண்ணீர் திறந்துவிட்டதால் அந்த பயிர்களும் சேதமடைந்துள்ளன. இதனால், அதன் இழப்பீடுக்கு ஒரு ஏக்கருக்கு 35,000 ருபாய் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன் என கூறினார் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி.

Tags :
Advertisement