For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

சென்னையில் 14 இடங்களில் கைவரிசை: வழிப்பறி- கொள்ளையை தடுக்க போலீஸ் வேட்டை

01:31 PM Jun 12, 2018 IST | Dinasuvadu Web
சென்னையில் 14 இடங்களில் கைவரிசை  வழிப்பறி  கொள்ளையை தடுக்க போலீஸ் வேட்டை
Advertisement

சென்னையில் செயின் பறிப்பு மற்றும் செல்போன் பறிப்பு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

இதனை கட்டுப்படுத்துவதற்காக சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் இரவு ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் கொள்ளை சம்பவங்களை தடுக்க முடியவில்லை.

மோட்டார் சைக்கிள்களில் மின்னல் வேகத்தில் செல்லும் இளைஞர்கள் பட்டப்பகலிலும், இரவு நேரங்களிலும் பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவங்களில் தினமும் ஈடுபட்டு வருகிறார்கள். அதே நேரத்தில் தனியாக நடந்து செல்லும் ஆண்களை குறி வைத்து செல்போன்களையும் பறிக்கிறார்கள்.

நேற்று ஒரே நாளில் மட்டும் சென்னையில் 14 பேரிடம் செயின் மற்றும் செல்போன்கள் பறிக்கப்பட்டன. புரசைவாக்கம், அரும்பாக்கம், கோயம்பேடு, விருகம்பாக்கம், அயனாவரம், சிந்தாதிரிப்பேட்டை, திருமங்கலம் உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து வழிப்பறி கொள்ளையர்கள் கைவரிசை காட்டினர்.

உயர் போலீஸ் அதிகாரிகள் மத்தியில் இச்சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க நேற்று இரவு அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சென்னை மாநகர் முழுவதும் போலீசார் இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்தினர். அனைத்து சாலைகளிலும், 10 மணிக்கு பின்னர் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.

வழிப்பறி சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து கொள்ளையர்கள் பற்றி போலீசார் துப்பு துலக்கினர்.

இதனை தொடர்ந்து திருவொற்றியூர், சாத்தான் காட்டு பகுதியில் பள்ளிக்கூடம் ஒன்றில் பதிவான கேமிரா காட்சி போலீசுக்கு கை கொடுத்தது. பார்த்திபன், மணி ஆகிய 2 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே வேப்பேரி பகுதியில் கைவரிசை காட்டிய 2 கொள்ளையர்களும் சிக்கினர். சித்தார்த் என்ற வாலிபர் தலைமையில் அப்பகுதியில் கூட்டாக இவர்கள் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. சிட்லப்பாக்கத்தில் விக்னேஷ் என்ற வாலிபர் பிடிபட்டார். மாங்காட்டிலும் 2 வழிப்பறி கொள்ளையர்கள் சிக்கினர். இவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னையில் நடைபெற்ற பல்வேறு கொள்ளை சம்பவங்களில் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடக்கிறது.

போலீசார் நடத்திய நள்ளிரவு வேட்டையில் பைக் ரேசில் ஈடுபட்ட 42 பேரும் சிக்கினர். அவர்களது மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டது. பைக் ரேசில் ஈடுபட்டு சிக்கிய இளைஞர்களுக்கும், வழிப்பறி கொள்ளை சம்பவத்தில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, சென்னையில் செயின் பறிப்பு சம்பவங்களை தடுக்க இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள் தொடரும் என்றார்.

சென்னையில் தொடரும் செயின் பறிப்பு மற்றும் செல்போன் திருட்டு சம்பவங்களால் பொது மக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர். சாலையில் நடந்து செல்லுவதற்கே அச்சமாக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். எனவே வழிப்பறி சம்பவங்களை கட்டுப்படுத்த போலீசார் தேவையான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது

Tags :
Advertisement